அமெரிக்க அதிபர் டிரம்ப் 17 நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்துள்ள நிலையில், இது அறிவு கெட்டத்தனமான செயல் என சக நீதிபதிகள் விமர்சனம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், எந்தவித காரணமும் சொல்லாமல் 17 நீதிபதிகளை பணியில் இருந்து நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை 15 நீதிபதிகளும், திங்கட்கிழமை 2 நீதிபதிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக கலிஃபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ் போன்ற மாகாணத்தை சேர்ந்த நீதிபதிகள் தான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த 17 பேரும் குடிவரவு நீதிமன்றத்தை சேர்ந்த நீதிபதிகள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"இது அறிவு கெட்டத்தனமான செயல். நீதிபதிகளை வேலையில் இருந்து நீக்குவதை காட்டிலும் அதிக நீதிபதிகளை வேலைக்கு எடுக்க வேண்டும். பல வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், நீதிபதிகளை வேலை விட்டு நீக்கியது முட்டாள்தனமானது" என்று நீதிபதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் சட்டவிரோதமாக தங்கியவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்கள் என்றும், நீதிமன்றமும் அவர்களுக்கு ஆதரவாக சில உத்தரவுகளை பிறப்பிக்கிறது என்றும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும்" டிரம்ப் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இன்னும் சில நீதிபதிகளும் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுவதால், அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.