அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் பின்பற்றும் இறக்குமதி வரி கொள்கைகளால் உலக நாடுகளிடையே வர்த்தக போரை உருவாக்கி, தன்னைத்தானே அழித்துக் கொள்வதாக அமெரிக்காவின் பிரபல பொருளாதார நிபுணர் ஸ்டீவ் வான்கே எச்சரித்துள்ளார். அவருடைய இந்தக் கருத்துக்கள் அமெரிக்காவிலும் உலக அளவிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் பிரபல பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான ஸ்டீவ் வான்கே டிரம்ப்பின் வர்த்தக கொள்கைகள் குறித்துப் பேசும்போது, "டிரம்பின் இந்த அறிவிப்புகள் முற்றிலும் தவறானவை. தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒருபோதும் எதிரியுடன் மோதக்கூடாது என்பது மாவீரன் நெப்போலியனின் அறிவுரை. இந்த விஷயத்தில் டிரம்ப் நெப்போலியனின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். ஆனால், அவர் தன்னைத்தானே அழித்துக்கொள்வதாகத் தெரிகிறது" என்று தெரிவித்தார்.
"இந்த விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். டிரம்ப்பின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் விரைவில் நிலைகுலைந்துவிடும். அவருடைய வரி விதிப்பு முற்றிலும் முட்டாள்தனமானது" என்று ஸ்டீவ் வான்கே குறிப்பிட்டார்.