வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவை கைது செய்ய தகவல் அளிப்போருக்கு 50 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.438 கோடி சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
வெனிசுலா அதிபர் மடூரோவை உலகின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவர் என டிரம்ப் தலைமையிலான அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் பாம் பொண்டி கூறுகையில், "அதிபர் டிரம்ப்பின் கீழ், மடூரோ நீதித் துறையிலிருந்து தப்ப முடியாது. அவரது குற்றங்களுக்காக அவர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்," என்றார்.
மடூரோ மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத குற்றச்சாட்டுகள் 2020-ஆம் ஆண்டு மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் ஒரு பகுதியாக, மடூரோவுடன் தொடர்புடைய 700 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரை கைது செய்வதற்கான புதிய அறிவிப்பு, மடூரோவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.