மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக எச்சரித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவளவன் எம்.ஜி.ஆரை விமர்சித்து பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, "எம்.ஜி.ஆரை தமிழக மக்கள் 'மனிதக் கடவுள்' என போற்றி கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரை திருமாவளவன் விமர்சனம் செய்கிறார் என்றால், அவர் அரசியலில் காணாமல் போய்விடுவார். இது நிச்சயம் நடக்கும்" என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க. ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்துக்கோ அப்பாற்பட்ட கட்சி என்று குறிப்பிட்ட இ.பி.எஸ்., "ஒரு சாதியை வைத்து அரசியல் செய்வது சாத்தியமற்றது. எங்கள் கட்சியில் பல்வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இந்த ஒற்றுமை திருமாவளவனுக்கு பொறுக்கவில்லை. அவர் நினைத்தது நடக்காததால் ஏற்பட்ட எரிச்சலில்தான் எம்.ஜி.ஆரை மோசமான வார்த்தைகளால் பேசுகிறார்" என்று குற்றம் சாட்டினார்.
தி.மு.க. கூட்டணியின் எதிர்காலம் குறித்து சந்தேகம் எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க. கூட்டணி இன்னும் எட்டு மாதங்களுக்கு நீடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால், வரவிருக்கும் எட்டு மாதங்களில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு சிறப்பான கூட்டணி அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.