அமெரிக்காவில் திடீரென பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக 39 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி, 9 பேர் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக கனமழை பெய்ததாகவும், குறிப்பாக கென்டக்கி என்ற பகுதியில் மட்டும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்தம் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பல முக்கிய சாலைகள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளதாகவும், 39 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், நிலைமை இன்னும் மோசமடைய வாய்ப்பு இருப்பதாகவும் கென்டக்கி மாநில கவர்னர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மக்கள் சாலைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இன்னும் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கென்டக்கி பகுதியில் 15 சென்டிமீட்டர் வரை மழை பெய்து உள்ளதாகவும், இதன் காரணமாக வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.