டெல்லியில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், மக்கள் பதட்டம் அடைய வேண்டாம் என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று அதிகாலை 5.36 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 4 என பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "டெல்லி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம் காரணமாக யாரும் பதட்டம் அடைய வேண்டாம். அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் உள்ள மக்கள் அனைவரின் பாதுகாப்புக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் எந்தவிதமான சேதமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், மக்கள் இன்னும் அச்சத்துடன் வீட்டிற்குள் செல்லாமல் தெருக்களில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முன்பு, 2015 ஆம் ஆண்டு டெல்லியில் ரிக்டர் அளவில் 3.3 என பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு சிறிய நிலநடுக்கங்கள் உணரப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.