உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், இளம் செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர் ஒருவரைத் தங்கள் நிறுவனத்திற்கு ஈர்க்க, 4 ஆண்டுகளுக்கு ரூ.2,000 கோடி சம்பளம் அளிக்க முன்வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்து வந்த 24 வயது மாட் டெய்ட்கே சமீபத்தில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் நுழைந்தார். அங்கு அவர் 'மோல்மோ' என்ற செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கி பெரும் சாதனை படைத்தார்.
இதுகுறித்து அறிந்த மார்க் ஜுக்கர்பெர்க், மாட் டெய்ட்கேவை மெட்டா நிறுவனத்தில் சேருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், 4 ஆண்டுகளுக்கு ரூ.1,200 கோடி சம்பளம் தருவதாகவும் கூறினார். ஆனால், அந்த அழைப்பை மாட் டெய்ட்கே ஏற்க மறுத்ததால், மார்க் அவரை நேரில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில், 4 ஆண்டுகளுக்கு ரூ.2500 கோடி சம்பளம் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த சம்பள வாய்ப்பை ஏற்றுக்கொண்ட மாட் டெய்ட்கே, விரைவில் மெட்டா நிறுவனத்தில் அதிகாரபூர்வமாக செயற்கை நுண்ணறிவு ஆய்வாளராக பணியில் சேர உள்ளார். இந்த செய்தி தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.