நடிகர் தனுஷ் நடித்த 'அம்பிகாபதி' என்று தமிழில் வெளியான இந்தி படமான Raanjhanaa திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி, தயாரிப்பு நிறுவனத்தால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, படத்தின் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்ட ஆனந்த் எல். ராய், தனது அனுமதியின்றியும், அக்கறையின்றியும் இந்த மாற்றம் செய்யப்பட்டதை ஒரு "துரோகம்" என குறிப்பிட்டுள்ளார்.
"இந்தப் படம் வெறும் ஒரு படைப்பு அல்ல; அது மனிதர்களின் கைகளில் உணர்வுபூர்வமாக உருவான ஒன்று. ஒரு இயந்திரத்தால் அதை மாற்றுவது புதுமையல்ல, அது ஒரு ஆழமான அவமானம்" என்று அவர் கூறியுள்ளார்.
படத்தின் ஆன்மா மற்றும் நோக்கத்தை குலைக்கும் வகையில் செய்யப்பட்ட இந்த மாற்றத்திற்கு படக்குழுவில் யாருக்கும் எந்த பங்கும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த மாற்றத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனது படைப்பின் உணர்வு சிதைக்கப்பட்டதால் இயக்குநர் ஆனந்த் எல். ராய் மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.