திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன நேரத்தை குறைப்பதற்காக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முயற்சி, பொதுமக்கள் மத்தியிலும், முன்னாள் தேவஸ்தான அதிகாரிகள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த தேவஸ்தான வாரிய கூட்டத்தில், ஏழுமலையான் தரிசனத்திற்கான காத்திருப்பு நேரத்தை குறைக்க, கூகுள் மற்றும் டிசிஎஸ் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து, அதிநவீன AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
"சாதாரண பக்தர்களுக்காக, ஏழுமலையான் தரிசனத்திற்காக வரிசைகளிலும், வைகுண்டம் வளாகத்திலும் காத்திருக்கும் நேரத்தை குறைக்க, கூகுள், டிசிஎஸ் மற்றும் பிற நிறுவனங்களுடன் இலவசமாக இணைந்து, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரிசன நேரத்தைக் குறைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது" என்று தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு அந்தக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இது தவறான தகவல்களைப் பரப்புவதாகவும், வெறும் விளம்பர நோக்கத்திற்கானது என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளரும், முன்னாள் தேவஸ்தான தலைவருமான புவனா கருணாகர ரெட்டி கூறியுள்ளார்.
ஆந்திராவின் முன்னாள் தலைமை செயலாளரும், தேவஸ்தானத்தின் முன்னாள் நிர்வாக அதிகாரியுமான எல்.வி. சுப்ரமணியம், தேவஸ்தானத்தின் இந்த திட்டத்தை சந்தேகிப்பதாகத் தெரிவித்தார். "கோயிலில் உள்ள பல வரம்புகள் காரணமாக, AI தொழில்நுட்பத்தால் தரிசன நேரத்தை மூன்று மணி நேரத்திற்கும் குறைவாக குறைப்பது சாத்தியமற்றது என்று கூறியுள்ளார்.
இந்த முன்னாள் அதிகாரிகளின் விமர்சனங்கள், தேவஸ்தானத்தின் புதிய திட்டத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.