கடந்த சில மாதங்களாகவே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக தலைமை எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே ஒரு உரசல் நீடித்து வந்தது. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் பேசியது எடப்பாடி பழனிச்சாமிக்கு பிடிக்கவில்லை.
எனவே செங்கோட்டையனின் பதவிகளை பறித்தார். அதன்பின் ஒரு நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரிடம் செங்கோட்டையன் நெருக்கமாக இருந்ததால் செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போதே செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் தெளிவான எந்த பதிலையும் சொல்லவில்லை. கட்சிக்கு துரோகம் செய்தால் வேறு வழியில்லை என்று கூறி வந்தார்.
அதிமுகவில் தான் நினைத்தது நடக்காது என்பதை புரிந்து கொண்ட செங்கோட்டையன் வேறு கட்சியில் சேர முடிவெடுத்தார். திமுகவுக்கு சென்றால் அதனை கடுமையாக விமர்சிப்பார்கள் என்பதால் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை அவர் தேர்ந்தெடுத்தார். நேற்று பட்டினப்பாக்கத்தில் இருந்த விஜயின் வீட்டிற்கு சென்று விஜய், புஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் 2 மணி நேரம் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன் இன்று காலை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சென்று தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில் இதுபற்றி எடப்பாடி பழனிச்சாமிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்/.. அவரிடம் போய் கேளுங்கள் என பதில் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.