கடந்த ஏப்ரல் மாதம் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் சகலகலா வல்லவன் படத்தில் வரும் இளமை இதோ இதோ என்ற பாடலை அஜித்தின் சண்டை காட்சி ஒன்றில் பயன்படுத்தி இருந்தனர். அதுபோல அர்ஜூன் தாஸ் எண்ட்ரிக்கு ஒத்த ரூபா தாரேன் என்ற பழைய பாடலை பயன்படுத்தி இருந்தனர். இந்த பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. ஆனால் தன்னிடம் அதற்கான அனுமதி வாங்கவில்லை என அவர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் மேல் வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தில் இருக்கும் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் ஓடிக்கொண்டிருந்த குட் பேட் அக்லி திரைப்படம் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் 75 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகக் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை 110 கோடி ரூபாய் கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருந்தது. கிட்டத்தட்ட மூன்று மாதத்துக்கு மேல் அந்த படம் ஸ்ட்ரீம் ஆகியுள்ள நிலையில் தற்போது பிரச்சனை எழுந்துள்ளதால் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.