தமிழ் சினிமாவில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் குடும்ப உறவுகளை மையப்படுத்திய முற்போக்கு கருத்துகளைத் தன் படைப்புகள் மூலம் தொடர்ந்து பேசி வந்த இயக்குநர் வி. சேகர், உடல்நல குறைவால் காலமானார். கே. பாக்யராஜின் துணை இயக்குநராக பணியாற்றிய இவர், 1990ஆம் ஆண்டு 'நீங்களும் ஹீரோதான்' படத்தின் மூலம் இயக்குநராக தடம் பதித்தார்.
இவர் இயக்கிய 15க்கும் மேற்பட்ட படங்களில், குறிப்பாக 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'காலம் மாறிப் போச்சு', 'விரலுக்கேத்த வீக்கம்' போன்ற திரைப்படங்கள் குடும்ப ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி. சேகர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த இயக்குநர் வி. சேகரின் உடல், அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் நெய்வாநத்தம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது விருப்பத்தின்படி, இன்று பிற்பகலில் அவரது பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. அவருக்கு மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.