Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் - 1962 முதல் 2021 வரை !!!

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் - 1962 முதல் 2021 வரை !!!
, சனி, 17 ஏப்ரல் 2021 (10:59 IST)
தமிழ் திரைப்படத்துறையில் ‘சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார். 

 
நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். ‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். 
 
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் வல்லவர், ‘கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்’ அவர்கள். அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலானப் படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் கடைபிடித்து, தமிழ் சினிமாவில் ‘சின்னக்கலைவாணர்’ எனப் போற்றப்பட்டார். 
 
திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது. ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு கலந்த பல சமூகக் கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கோலோச்சி வரும் விவேக்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.
 
சின்னக் கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் அவர்கள், 1961  ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில் பிறந்தார். இவருடைய முழு பெயர் விவேகானந்தன் ஆகும். தன்னுடைய பள்ளிப்படிப்பை மதுரையில் முடித்த சின்னக்கலைவாணர் அவர்கள், பிறகு அதே ஊரிலுள்ள அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்றார். அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்ற அவர், சிறிது காலம், தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப்பார்த்து வந்தார். அதன் பிறகு, சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் வெற்றிப்பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.
 
1987 ஆம் ஆண்டு, ‘மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமா துறையில் கால்பதித்த சின்னக்கலைவாணர் அவர்கள், அத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் பிறகு, 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.
 
அதனைத் தொடர்ந்து, ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘புது மாப்பிள்ளை’, ‘கேளடி கண்மணி’, ‘இதய வாசல்’, ‘புத்தம் புது பயணம்’ எனப் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, வெறும் நகைச்சுவையை மட்டும் வெளிபடுத்தும் காட்சிகளில் நடிக்காமல், நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தார். 
 
‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘உன்னருகே நானிருந்தால்’, ‘ஆசையில் ஓர் கடிதம்’, ‘சந்தித்த வேளை’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘பெண்ணின் மனதைத்தொட்டு’, ‘பாளையத்து அம்மன்’, ‘சீனு’, ‘லூட்டி’, ‘டும் டும் டும்’, ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘ஷாஜகான்’, ‘மனதைத் திருடிவிட்டாய்’, ‘தென்காசிப் பட்டணம்’, ‘யூத்’, ‘ரன்’, ‘காதல் சடுகுடு’, ‘சாமி’, ‘விசில்’, ‘தென்னவன்’, ‘தூள்’, ‘பாய்ஸ்’, ‘திருமலை’, ‘பேரழகன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘பசுபதி மே/பா ராசக்காபாளையம்’, ‘சண்டை’, ‘படிக்காதவன்’, ‘பெருமாள்’, ‘குரு என் ஆளு’, ‘ஐந்தாம் படை’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘சிங்கம்’, ‘பலே பாண்டியா’, ‘உத்தம புத்திரன்’, ‘சீடன்’, ‘மாப்பிள்ளை’, ‘வெடி’ போன்ற திரைப்படங்கள் இவருடைய நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்.
 
இவருடைய நகைச்சுவை பெரும்பாலும் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இருப்பதால், இவரை சினிமா ரசிகர்கள் ‘சின்னக்கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞன்’ என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் இதற்கு சான்றுகளாகும். 
 
அதுமட்டுமல்லாமல், தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வரும் விவேக் அவர்கள், ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார். 
 
1990-களின் தொடக்கத்தில் துணை நடிகராகத் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி, இப்பொழுது பிரபல நகைச்சுவை நடிகராக விளங்குகிறார். இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். நகைச்சுவையில் கருத்துக்களை மட்டும் வழங்குவதில் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஒரு சில சமூக நலக் குறிக்கோள்களை கடைபிடித்து, அதனை செயல்படுத்தியும் வருகிறார். 
 
குறிப்பாகச் சொல்லப்போனால், தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், என். எஸ். கிருஷ்ணன் அவர்களுக்குப் பிறகு, நகைச்சுவையில் பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர் விவேக் என்று சொன்னால் அது மிகையாகாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விவேக் மறைவுக்கு குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்திய சூர்யா!