கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் நடிகர் விவேக் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார் என்றும் உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த 15 அம் தேதி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இதனிடையே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இவரது மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நகைச்சுவை நடிகர் திரு.விவேக் அவர்களின் மறைவு மிகவும் வேதனையளிக்கிறது. சிந்திக்க வைக்கும் கருத்துகளை தன்னுடைய நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். நடிப்போடு மட்டும் நிற்காமல் தமிழ் சமூகத்தின் மீது பற்றும், பாசமும் கொண்டவர். ஐயா அப்துல்கலாம் அவர்களுக்கே விவேக்கை பிடிக்கும் என்று சொன்னால் அவரை இந்தியாவிற்கே பிடிக்கும்.
சமூக செயல்பாட்டாளராக ஒரு நடிகர் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர். அப்படிப்பட்ட நல்ல எண்ணம் கொண்ட நடிகர் விவேக் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது நண்பர்களுக்கும், சினிமா துறையினருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.