Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் விவேக் மாரடைப்புக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பா? என்ன சொல்கிறது தமிழக அரசு?

நடிகர் விவேக் மாரடைப்புக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பா? என்ன சொல்கிறது தமிழக அரசு?
, சனி, 17 ஏப்ரல் 2021 (10:30 IST)
தமிழ் திரைப்பட நடிகர் விவேக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக சேர்க்கப்பட்டுள்ளார்.
 
குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது விவேக் மயங்கி விழுந்தார் என்றும், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும், பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் திரைப்பட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கூறியிருந்தார். நடிகர் விவேக் தற்போது சுயநினைவோடு உள்ளார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், நடிகர் விவேக்கின் உடல்நிலை தொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வரும் சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் விஜயகுமார் சொக்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காலை 11 மணியளவில் சுயநினைவிழந்த நிலையில், நடிகர் விவேக் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு அவரது குடும்பத்தால் கொண்டு வரப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை நிபுணர்கள் குழு பரிசோதித்தது. பின்னர் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ சிகிச்சையில் உள்ள விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.
 
இது மாரடைப்பு அதிர்ச்சியுடன் கூடிய இதய குறைபாடு பிரச்னை. இதற்கும் கோவிட் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே, விவேக்கின் உடல்நிலை தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் அந்த மருத்துவமனைக்கே நேரில் வந்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் மருத்துவமனை நிர்வாகிகளுடன் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "ஒரு வாரத்திற்கு முன்பே விவேக் தானாகவே தடுப்பூசி போட வருகிறேன் என்று கேட்டிருந்தார். அவர் போட்டுக்கொண்டால் அதனை பார்த்து பலர் தடுப்பூசி போடுவதற்கு முன்வருவார்கள் என்று கூறி அவரே நேற்று வருகை தந்திருந்தார். மத்திய அரசின் தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளின் படி, இதய கோளாறு, புற்றுநோய் போன்ற பல்வேறு நோய் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், விவேக்கின் நிலைமை எங்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாகத்தான் உள்ளது. நேற்றைய தினம் எங்களுடன் இருந்தவருக்கு, இன்றைய தினம் இதுபோன்ற இதய கோளாறு ஏற்பட்டுள்ளது. எனினும், இதற்கும் நேற்று தடுப்பூசி போட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை," என்று தெரிவித்தார்.
 
"விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மருத்துவமனையில் நேற்று மட்டும் 800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, இன்றும் அங்கு ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ரத்தக்குழாயில் ஒரே நாளில் அடைப்பு ஏற்படாது. இணை நோய் உள்ளவர்களும் நிச்சயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளும் போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கும், விவேக்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கும் நூறு சதவீதம் தொடர்பில்லை," என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
 
தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள்
 
முன்னதாக, நேற்று வியாழக்கிழமை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் விவேக். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக மக்களிடம் அச்சம் நிலவுவதாகவும், அந்த அச்சத்தைப் போக்கவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அவர் அப்போது ஊடகங்களிடம் தெரிவித்தார்.
 
இதற்காக, சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனையின் டீன் மருத்துவர் ஜெயந்தி ஆகியோருக்கும், இரு மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்து அவர் ட்வீட் செய்திருந்தார்.
 
தமது கருத்தான நகைச்சுவைக் காட்சிகளுக்காக, சின்னக் கலைவாணர் என்று புகழப்படும் நடிகர் விவேக், 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்றவர் விவேக்.
 
(தமது சிந்திக்கவைக்கும் நகைச்சுவைக் காட்சிகளுக்காகப் பெயர் பெற்ற பழம் பெரும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் கலைவாணர் என்று அழைக்கப்படுகிறார்)

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் புதிதாக 2.32 லட்சம் கொரோனா பாதிப்பு - இந்திய நிலவரம்!