தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது புதிய திரைப்படமான 'ரிவால்வர் ரீட்டா'வின் விளம்பர நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாக உள்ளதாக கூறினார்.
"துபாய் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாகவே இருக்கிறது. துபாயில் கடுமையான சட்டங்கள் இருப்பதால் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கிறது. இந்தியாவிலும் இதேபோன்ற சூழல் உருவாகி, நிலைமை மாற வேண்டும்," என்று தன் கருத்தை பதிவு செய்தார்.
மேலும், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் 'டீப்-ஃபேக்' புகைப்படங்கள் குறித்து பேசிய அவர், அது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், சமூக ஊடகங்களில் வரும் படங்களை கண்டு, "நாம் இப்படி உடையணிந்தோமா?" என்ற சந்தேகம் தனக்கே எழுவதாகவும் தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாகவும், சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.