தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்த போதிலும், தலைமை பயிற்சியாளர் கௌதம் காம்பீரை பதவியில் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காம்பீருக்கு பதிலாக வி.வி.எஸ். லக்ஷ்மன் நியமிக்கப்படலாம் என்ற வதந்திகளை பி.சி.சி.ஐ. முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் கூறுகையில், "நாங்கள் தற்போது கௌதம் காம்பீரை மாற்ற விரும்பவில்லை. அவர் ஒரு அணியை சீரமைத்து கொண்டிருக்கிறார். அவருடைய ஒப்பந்தம் 2027 உலகக்கோப்பை வரை நீடிக்கும்" என்று உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், அணியை சீரமைக்க அவருக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர் முடிந்த பின்னர், அணி நிர்வாகத்துக்கும் தேர்வாளர்களுக்கும் இடையே ஒரு கூட்டம் நடைபெறும். டெஸ்ட் அணியின் செயல்பாட்டை மேம்படுத்துவது குறித்து காம்பீரிடம் விவாதிக்கப்படும்.
முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், காம்பீருக்கு ஆதரவாக பேசுகையில், அணியின் வெற்றி அல்லது தோல்விக்கு மட்டும் பயிற்சியாளரை குறை கூறுவது நியாயமில்லை என்று வாதிட்டுள்ளார்.