ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியதை அடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மற்றொரு போட்டி உறுதியாகியுள்ளது.
நேற்று நடந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. 147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம், 105 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனால், பாகிஸ்தான் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது.
இந்த வெற்றியின் மூலம், முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், மீண்டும் மோத உள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டி செப்டம்பர் 21ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற போட்டி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மீண்டும் ஒரு பரபரப்பான போட்டி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.