பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 100-வது சுதந்திர தினத்திலும் பிரதமர் மோடி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தனது ஆசை என்று அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாள் இன்று 145 கோடி இந்தியர்களும் கொண்டாடும் ஒரு பண்டிகை என்று முகேஷ் அம்பானி தனது காணொளியில் குறிப்பிட்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமம் மற்றும் அம்பானி குடும்பத்தின் சார்பாக வாழ்த்து தெரிவிப்பதாகக் கூறிய அவர், இந்தியாவின் 'அமிர்த காலத்தில்' மோடியின் பிறந்தநாள் வருவது தற்செயல் நிகழ்வு அல்ல என்று கூறினார்.
மேலும், இந்தியாவை உலக அளவில் ஒரு புதிய வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கு மோடியின் தலைமை மிகவும் அவசியம் என்றும், இந்தியா 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போதும், அவர் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் முகேஷ் அம்பானி தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
பில் கேட்ஸ், சச்சின் டெண்டுல்கர், ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.