இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதம் அடித்து அசத்தினார்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்து, 49.5 ஓவர்களில் 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, 91 பந்துகளில் 117 ரன்கள் குவித்து, அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். அவரைத் தொடர்ந்து, தீப்தி சர்மா 40 ரன்களையும், ரிச்சா கோஷ் 29 ரன்களையும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா அணியின் சார்பில், டார்ஸி பிரௌன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஷ்லே கார்ட்னர் 2 விக்கெட்டுகளையும், மற்ற பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 293 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சற்று முன் வரை ஆஸ்திரேலியா மகளிர் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் இன்னும் 26 ஓவரில் அந்த அணி 188 ரன்கள் வெற்றிக்கு எடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது