தமிழகத்திலிருந்து நான் முதல்வன் திட்டம் மூலம் படித்தவர்கள் யுபிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அடுத்த கட்ட திட்டங்களை அதிரடியாக அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு திமுக பொறுப்பேற்றது முதலாக செயல்படுத்தி வரும் திட்டங்களில் முக்கியமான ஒன்று நான் முதல்வன் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி படிக்கும் காலத்திலேயே பிரபல நிறுவனங்களின் உதவியுடன் பல்வேறு திறன் வளர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் யுபிஎஸ்சி தேர்வுகளில் முதன்மை தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுபவர்களுக்கு மெயின்ஸ், இண்டெர்வியூ உள்ளிட்டவற்றிற்கு உதவும் வகையில் மாதம் ரூ.7500 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
சமீபத்தில் இந்த நான் முதல்வன் திட்டம் மூலம் உதவிகள் பெற்று படித்த பலரும் யுபிஎஸ்சி தேர்வின் பல்வேறு பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதை மகிழ்வுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் புதிய அறிவிப்புகளையும் முதல்வர் மு.க,.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக சென்னையில் ரூ.40 கோடி மதிப்பில் புதிய பயிற்சி மையம் கட்டப்பட உள்ளது. சகல வசதிகளுடன் உணவு, உறைவிடமும் வழங்கப்பட்டு 500 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் ஷெனாய் நகரில் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்காக படிக்கும் மாணவர்களுக்கு மாவட்டம்தோறும் அறிவுசார் மையங்கள் சமீபமாக அமைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய முயற்சி மாணவர்களுக்கு மேலும் உத்வேகத்தை வழங்குவதுடன், பல ஆயிரங்கள் செலவு செய்து கோச்சிங் செண்டர் செல்ல முடியாதவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் என கூறப்படுகிறது.
Edit by Prasanth.K