சமீபத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்தது குறித்து, மத்திய அரசுடனான பிரச்சினைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காரச்சாரமாக பேசியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுக்கான உதவிகளை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர் “நாட்டிற்கே முன்னொடியாய் பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் தமிழ்நாடு போராடி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகளாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் எதிரானவர்களோடு சேர்ந்து உறவாடி தமிழ்நாட்டையே அடகுவைக்கும் எண்ணத்துடன் அவர்கள் உள்ளனர்.
நீட் தேர்வு எதிர்ப்பு தொடங்கி, மும்மொழி திட்ட நிராகரிப்பு, வக்பு சட்டத்திருந்த எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு என்று நாம்தான் இந்திய அளவில் அனைத்து மாநிலங்களையும் ஒன்று திரட்டி வலுவாக குரல் கொடுத்து வருகிறோம். மாநில உரிமைகளின் முகமாக திமுக உள்ளது.
நீட் தேர்வில் விலக்கு தருவோம், இந்தியை திணிக்க மாட்டோம் என அமித்ஷாவால் வாக்குறுதி தர முடியுமா? தமிழ்நாட்டிற்கு இவ்வளவு சிறப்பு நிதி கொடுத்துள்ளோம் என பட்டியலிட முடியுமா? அல்லது தொகுதி மறுசீரமைப்பாம் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாது என்று வாக்குறுதிதான் தர முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் “நான் அழுது புலம்புபவனும் அல்ல, ஊர்ந்து சென்று காலில் விழுபவனும் அல்ல. உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம். 2026ம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான். தமிழ்நாடு எப்பவுமே டெல்லிக்கும் அவுட் ஆப் கண்ட்ரோல்தான். அமித்ஷா மட்டுமல்ல எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K