அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். தமிழக அரசியலில் சுமார் அரை நூற்றாண்டு அனுபவம் கொண்ட செங்கோட்டையனின் இந்த நகர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டிருந்த செங்கோட்டையன், நேற்று தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். இதை தொடர்ந்து, நேற்று மாலை விஜய்யை சந்தித்து பேசிய அவர், இன்று சென்னை பனையூரில் த.வெ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவருடன் முன்னாள் எம்.பி. சத்யபாமா உட்பட அவரது ஆதரவாளர்களும் இணைந்தனர்.
த.வெ.க.வில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு, நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதுமட்டுமின்றி ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் என 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசியாக அறியப்பட்ட செங்கோட்டையன், அ.தி.மு.க. பிளவு காரணமாக எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டார். தேர்தல் பிரசாரங்களை ஒருங்கிணைக்கும் ஆளுமை கொண்ட செங்கோட்டையனின் வருகை, த.வெ.க.வின் அமைப்பு ரீதியான பலத்தை அதிகரித்துள்ளது.