சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி, நடிகர் விஜய் மீது புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் கோவை மாவட்ட பொறுப்பில் இருந்தவர் வைஷ்ணவி. கடந்த மே மாதம் சக தவெக நிர்வாகிகளோடு ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக கட்சியிலிருந்து விலகிய வைஷ்ணவி, அடுத்த சில நாட்களிலேயே திமுகவில் இணைந்தார். கட்சியின் நீண்ட கால தொண்டர்களே உதயநிதி உள்ளிட்ட கட்சி முக்கியத் தலைவர்களை காண அவகாசம் கேட்டு காத்திருக்கும் நிலையில் வைஷ்ணவி நேரடியாக உதயநிதியையும் சந்தித்தார்.
திமுகவில் சேர்ந்தது முதல் எதிர்கட்சிகளை விமர்சித்தும் வைஷ்ணவி பேசி வருகிறார். இந்நிலையில் அவர் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பல அவதூறுகளை பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது கோவை மாநகர காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார் வைஷ்ணவி.
அதில் தன்னை சமூக வலைதளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் சித்தரிக்கும் தவெக தொண்டர்கள் மீதும், அவர்களை தட்டிக் கேட்காமல், கண்டுகொள்ளாமல் உள்ள தவெக தலைவர் விஜய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கும் முன்னர் விஜய்க்கு ஆதரவாக பேசி வந்தவர் தற்போது விஜய் மீதே புகார் அளித்துள்ளது தவெக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K