அதிமுகவை கைப்பற்ற தொடர்ந்து போராடி வந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனிக்கட்சி என்ற அஸ்திரத்தை எடுத்ததுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்ட நிலையில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடங்கிய ஓபிஎஸ் தனது தர்மயுத்தத்தை தொடர்ந்து நடத்தி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உடைய, அதை வாய்ப்பாக பயன்படுத்தி பாஜக கூட்டணியில் இணைந்தது ஓபிஎஸ் அணி. அதன்மூலம் பாஜக தலைமை உதவியுடன் அதிமுகவை மீள பெறலாம் என்ற ஓபிஎஸ்ஸின் கணக்கு தவறிவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது அதிமுக மீண்டும் பாஜகவுடன் இணைந்துவிட்ட நிலையில் ஓபிஎஸ்ஸின் கோரிக்கைகளுக்கு அட்ஜஸ்ட் செய்து செல்ல சொல்லி மேலிடம் வலியுறுத்துகிறதாம். இதற்கு மேல் கட்சி அடையாளம் இல்லாமல் இருந்தால் ஆதரவாளர்களும் குறைந்து விடுவார்கள் என்று புதிய கட்சி என்ற பாதைக்கு திரும்பியுள்ளாராம் ஓபிஎஸ்.
கட்சிக்கு செண்டிமெண்டலாக எம்ஜிஆர் பெயரை வைக்கவே ஓபிஎஸ் விரும்புகிறாராம். எம்ஜிஆர் அதிமுக அல்லது எம்ஜிஆர் அம்மா அதிமுக என கட்சிக்கு பெயர் வைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு. இதற்காக தனக்கு நெருக்கமான காஞ்சிபுரம் மாவட்ட முக்கிய புள்ளியை டெல்லிக்கு அனுப்பியுள்ளாராம் ஓபிஎஸ்.
செப்டம்பர் 4ம் தேதி மதுரையில் மாநாட்டை அறிவித்துள்ள ஓபிஎஸ் அதில் தனது புதிய கட்சியை அறிவிக்கப்போவதாகவும், அதற்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது. ஆனால் சீட் ஒதுக்கீட்டில் அதிமுக முடிவு செய்வதுதான் இறுதியாக இருக்கும் என்பதால், தமிழக வெற்றிக் கழகம் பக்கமாகவும் ஓபிஎஸ் அணியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K