விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில், போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து சென்ற இரண்டு பெண்களை வைத்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னும் பின்னும் முரணான பதில்களை அளித்ததால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, பெண் போலீசார் மூலம் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த இரண்டு பெண்களும் தங்களது கால்கள் மற்றும் தொடைகளில் டேப்புகள் மூலம் புதுவையில் இருந்து கடத்தி வந்த 240 மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், யசோதா என்ற 77 வயதுடைய பெண் மற்றும் சின்ன பாப்பா என்ற 44 வயது பெண் ஆகிய இருவரும், புதுவையில் இருந்து தமிழகத்திற்கு மதுபானங்களை கடத்தி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். யசோதாவுக்கு இதற்கு முன்னர் 15-க்கும் மேற்பட்ட மதுவழக்குகள் உள்ளன என்றும், சின்ன பாப்பாவுக்கும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.