புதிய வக்ஃப் சட்டத்தின் மூலம் நில மாஃபியாக்களின் கொள்ளை முயற்சிகள் நிறுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இதுகுறித்து மேலும் கூறியபோது, காங்கிரஸ், அரசியலமைப்பை அதிகாரத்திற்கான கருவியாகவே பயன்படுத்தி வந்தது. அவசர நிலையின் போது அரசியலமைப்பை முற்றிலும் அடித்தொழித்தது. மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை அரசியலமைப்பு குறிப்பிடுகிறது. ஆனால் காங்கிரஸ் அதைப் பிறப்பித்து வைத்தபடியே செயல்படுத்தவில்லை. இன்று உத்தரகண்டில் சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், அதையும் காங்கிரஸ் எதிர்க்கின்றது.
இட ஒதுக்கீடு வழங்கிய பலன்கள் உண்மையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களுக்கு சென்றடைந்ததா என்பதை காங்கிரஸ் ஒருபோதும் கவனிக்கவில்லை. வக்ஃப் விதிகளையும் காங்கிரஸ் தனது சொந்த நலனுக்காக மாற்றியுள்ளது.
வக்ஃப் எனும் பெயரில் லட்சக்கணக்கான ஹெக்டேர்களில் நிலங்கள் உள்ளன. அவை ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் நலனடைந்திருப்பார்கள். ஆனால், நில மாஃபியாக்கள்தான் அதில் பயனடைந்தனர்.
புதிய வக்ஃப் சட்டத்தின் கீழ், இனிமேல் எந்தவொரு ஆதிவாசி உடைய நிலத்தையோ சொத்தையோ வக்ஃப் வாரியம் தொட முடியாது. ஏழை முஸ்லிம்கள் தங்களுக்குரிய உரிமைகளை பெறுவார்கள். இதுவே உண்மையான சமூக நீதி,” என கூறினார்.