"அதிகாரம் மிக வலிமையானது. சமூக மாற்றத்திற்கான பயணத்தில் அது முதன்மையானது. ஆகவே, அதிகாரத்தை கைப்பற்றுங்கள். மனித மாண்பை மீட்டெடுங்கள்" என்று சொன்ன புரட்சியாளர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளான இன்று, மக்கள் அரசியல் வழி சமத்துவ சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம் என தவெக ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நீ படிக்கக் கூடாது, பள்ளி வகுப்பறையில் சமமாக அமரக் கூடாது" என்றெல்லாம் எந்த சமூகம் அவரை அவமானப்படுத்தியதோ, புறம் தள்ளியதோ, அந்த சமூகத்தின் விடுதலைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி என்ற அறச் சிந்தனைகள் வழி நமக்கான அரசியலை வடிவமைத்தார். அதற்கு இடையூறாக உள்ள மதப் பெரும்பான்மைவாதம், சாதிய ஏற்றத்தாழ்வு மற்றும் பாலின அடக்குமுறைகளை எதிர்க்கும் கொள்கை அரணாக நம்மை வழிநடத்தி வருகிறார். கல்வியே காலத்தின் திறவுகோல் என்ற உண்மையின் வழிகாட்டியாக, என்னை உருவாக்கிய இலட்சியத் தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர்.
உலகின் முதன்மை சிந்தனையாளர்களில் ஒருவராக அவரை உலகம் கொண்டாடுகிறது. அமெரிக்கக் கறுப்பின அடிமை சட்டத்தை ஒழித்த ஆப்ரஹாம் லிங்கன், ரஷ்யக் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த புரட்சியாளர் லெனின், பின்னாளில், தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கல் அரசை வீழ்த்திய நெல்சன் மண்டேலா போன்ற உலகத் தலைவர்களுக்கு இணையான அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டவர் புரட்சியாளர் அம்பேத்கர்.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா சிறப்புப்பெற, அவரின் போராட்ட உழைப்பே காரணமாகியது. இன்றும், நடக்கும் மக்கள் போராட்டங்கள் அனைத்திலும் அண்ணலின் பதாகைகளே ஏந்தப்படுகிறது. காரணம், எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் அதை எதிர்த்து புரட்சியாளர் அம்பேத்கர் இருப்பார். எங்கெல்லாம் புரட்சியாளர் அம்பேத்கர் இருக்கிறாரோ, அங்கெல்லாம் ஆதிக்கத்தின் அடித்தளம் அசைத்துப் பார்க்கப்படுகிறது. அந்தவிதத்தில், புரட்சியாளர் அம்பேத்கர் இந்தியாவின் Godfather ஆவார்!
"அதிகாரம் மிக வலிமையானது. சமூக மாற்றத்திற்கான பயணத்தில் அது முதன்மையானது. ஆகவே, அதிகாரத்தை கைப்பற்றுங்கள். மனித மாண்பை மீட்டெடுங்கள்" என்று சொன்ன புரட்சியாளர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளான இன்று, மக்கள் அரசியல் வழி சமத்துவ சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்!