ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படும் நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறி அரசியல்வாதியாக உருவெடுத்திருக்கிறார். கலந்த இரண்டு வருடங்களாக தமிழக வெற்றிக்கழகம் தமிழக அரசியல் களத்தில் களமாடி வருகிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என விஜய் நினைக்கிறார். தவெகவுக்கு மக்கள் அதிக அளவில் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருப்பதாக தெரிகிறது.
ஆனால் விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் அவருக்கு வாக்குகளாக மாறாது. நடிகர், நடிகை என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும். ஆனால் ஓட்டு போடும் போது மக்கள் தெளிவாக முடிவெடுப்பார்கள் என அதிமுக மற்றும் திமுகவினர் சொல்லி வருகிறார்கள். சமீபத்தில் கூட விஜயின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில்தான் திருச்செந்தூர் கோவிலுக்குள் தவெக தொண்டர்கள் செய்த அலப்பறை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்செந்தூர் கோவில் வளாகத்திற்குள் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தவெக தொண்டர்கள் சிலர் தளபதி விஜய்க்கு அரோகரா.. தமிழக வெற்றிக்கழகத்திற்கு அரோகரா.. என கோஷம் எழுப்பியிருக்கிறார்கள்.
அதோடு அடுத்த வருடம் அறநிலையத்துறை டேக் ஓவர் செய்து பாஸ் வழங்குவோம். இந்த மாதிரி வரிசையில் நிற்க அவசியமில்லை எனக்கூறி விஜயின் போட்டோவை காட்டி பக்தர்களிடம் வாக்குகளும் சேகரித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.