தான் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து காவலர் தன்னை நிறுத்தி ஒரே ஒரு கேள்வி கேட்டதாகவும், அந்தக் கேள்வி தன்னை உணர்ச்சிவசப்பட வைத்து அழ வைத்துவிட்டது என்றும் சென்னை இளம்பெண் ஒருவர் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை இளம்பெண் ஜனனி என்பவர் ஐடி துறையில் வேலை பார்த்து வரும் நிலையில், தினம் தோறும் வேலைப்பளு, மன அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார். இந்த நிலையில், சமீபத்தில் தான் வேலையை முடித்துவிட்டு மிகவும் சோர்வுடனும், மன அழுத்தத்துடனும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென போக்குவரத்து காவலர் ஒருவர் வழிமறித்தார்.
அவர் எதற்காக நிறுத்தினார் என்பது கூட எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், அவர் கேட்ட ஒரே ஒரு கேள்வி என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. அவர் கேட்டது "நலமாக இருக்கிறீர்களா?" என்றுதான் கேட்டார். அதைக் கேட்டதும் நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டேன். அதுவரை என் மனதில் அடக்கி வைத்திருந்த சோகம் எல்லாம் வெளியே வந்துவிட்டது. அதன் பின் அவர் எனக்கு ஆறுதல் கூறி என்னை அன்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
நான் எனது மனபாரமெல்லாம் குறைந்து மிகவும் மகிழ்ச்சியாக வீட்டுக்குச் சென்றேன். அந்த போக்குவரத்து காவலரை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.