சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு காலி செய்ய மறுத்த வழக்கறிஞருக்கு நான்கு மாதம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ் என்பவர், வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மே 31ஆம் தேதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவையும் மீறி வழக்கறிஞர் மோகன்தாஸ் வாடகை வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, வீட்டின் உரிமையாளர் மீண்டும் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடும் கோபத்துடன், "வாடகை வீட்டில் இத்தனை ஆண்டுகளாக இருந்து கொண்டு வீட்டு உரிமையாளரை கொடுமைப்படுத்தியது, நீதிமன்ற உத்தரவை மீறியது, நீதிமன்றத்தை அவமதித்தது" உள்ளிட்ட காரணங்களால் நான்கு மாத சிறைத்தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பளித்தார்.
மேலும், மேல்முறையீடு செய்ய கால அவகாசம் கிடையாது என்றும், சிறையில் இருந்துகொண்டே மேல்முறையீடு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்ததை அடுத்து, வழக்கறிஞர் மோகன்தாஸ் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். "இப்படி ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நேர்மையற்ற வழக்கறிஞருக்கு நீதிமன்றமே சாதகமானதற்கு சமம்" என்று கூறிய நீதிபதி, பார் கவுன்சிலிலும் அவரது நடத்தை குறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.