சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, அஜித்குமார் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள காளிக்கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு குற்றச்சாட்டில் தனிப்படை காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளை, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமித்தது.
இந்த விசாரணையின் இடைக்கால அறிக்கையை விசாரணை அதிகாரி இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், செய்தியாளர்களிடம் பேசுகையில், "சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்ட ஸ்டெர்லைட் வழக்கு இன்று ஏழாவது ஆண்டாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல்தான் சாத்தான்குளம் வழக்கும். ஆகையால், தமிழகத்தில் உள்ள நேர்மையான காவல்துறை அதிகாரிகளை கொண்டு இந்த விசாரணையை மேற்கொள்ளலாம் என நாங்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தோம்," என்றார்.
சி.பி.ஐ. விசாரணையில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது என்றும், மேலும் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் சி.பி.ஐ. விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
"இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்திற்கு அனைத்து நிவாரணங்களும் வழங்க வேண்டும் என்று ஹென்றி திபேன் தெரிவித்தார்.