இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'கல்லுக்குள் ஈரம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'கல்லுக்குள் ஈரம்' படத்தைத் தொடர்ந்து, 'சிவப்பு மல்லி', 'நீதி பிழைத்தது', 'நாடோடி ராஜா', 'ஆனந்த ராகம்', 'முதல் மரியாதை', 'கரிமேடு கருவாயன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை அருணா, சென்னை ஈ.சி.ஆர். சாலையில் தனது கணவர் மன்மோகன் குப்தாவுடன் வசித்து வருகிறார். மன்மோகன் குப்தா, வீடு மற்றும் பங்களாக்களில் அலங்கார பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், அவரது நிறுவனம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முழுமையான சோதனைக்ப் பிறகு, மன்மோகன் குப்தா மீது வழக்கு பதிவு செய்யப்படுமா அல்லது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தெரியவரும் என அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாலை முதல் திடீரென சோதனை நடத்தி வருவது, அந்தப் பகுதியிலும், திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.