அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான விண்ணப்பம் நாளை முதல் துவங்கப்படவிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பணியில் உள்ள எல்லா ஆசிரியர்களும் டெட் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்கிற கட்டாயம் உருவானது. அதன்படி தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் இந்த தேர்வை நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் என வருடத்திற்கு மூன்று முறை இந்த தேர்வு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில்தான் ஜனவரி மாத தேர்வுக்கு விண்ணப்பிக்க தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. அப்படி டெட் தேர்வில் தகுதி பெறாமல் இருக்கும் ஆசிரியர்கள் 2 ஆண்டுகளில் இந்த தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும் என நீதிமன்றம் கூறியது. பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் 5வருடங்கள் மட்டுமே உள்ளவர்களுக்கு மட்டும் தளர்வு அளிக்கப்பட்டது.
மேலும் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் டெட் தேர்வு எழுத விரும்பாதவர்கள் பணியிலிருந்து கட்டாய ஓய்வு பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது.
எனவேதான் ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வை தமிழக அரசு நடத்த துவங்கியது. ஏனெனில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஒரு லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது.
விண்ணப்பதாரர்கள் www.trb.tn.gov.in என்கிற இணையதளம் மூலம் நாளை(நவ 20) முதல் டிசம்பர் டிசம்பர் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு எழுதுபவர்கள் செப்டம்பர் 1ம் தேதி 2025க்கு முன்பே ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. முழு நேர, பகுதி நேர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் உள்ள ஆசிரியர்களும் இந்த தேர்வு எழுதலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.