நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அபிநய். அதன்பின் ஜங்ஷன் சிங்காரச் சென்னை உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதில் பல படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வருவார். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.
இவர் ஒரு டப்பிங் கலைஞரும் கூட. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த துப்பாக்கி படத்தில் வில்லனுக்கு குரல் கொடுத்தவர் அபிநய்தான். இது பலருக்கும் தெரியாது. அதேநேரம் ஒரு கட்டத்தில் சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார்.
வறுமை காரணமாக ஏசி உட்பட வீட்டிலிருந்த பல பொருட்களையும் விற்றுவிட்டதாக பேட்டி கொடுத்திருந்தார்.
ஒரு பக்கம் கடந்த சில வருடங்களாகவே கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வந்தார்.
எனவே அவருக்கு நடிகர் தனுஷ், கே.பி.ஒய் பாலா போன்ற சிலர் பணம் கொடுத்து உதவினார்கள். கடைசியாக காந்தி கண்ணாடி திரைப்பட விழாவிலும் அபிநய் கலந்து கொண்டார்.
இந்நிலையில்தான் இன்று அதிகாலை அவர் தனது வீட்டிலேயே மரணமடைந்தார். அவருக்கு வயது 43.