சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக நவம்பர் 18 முதல் 25 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ஜெ. குமரகுருபரன் விடுத்துள்ள அறிவிப்பின்படி மொத்தம் 947 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும். குறிப்பிட்ட நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மையங்கள் இயங்கும்.
திருத்த படிவங்களை பூர்த்தி செய்வதில் உள்ள சந்தேகங்களை தீர்க்கவும், 2002 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற விவரங்களை சரிபார்க்கவும் இந்த மையங்கள் உதவுகின்றன. கணினி மூலம் வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, படிவத்தை பூர்த்தி செய்ய உதவி அளிக்கப்படும்.
அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட்களும் தினமும் 50 படிவங்களை பெற்று வாக்காளர்களுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் திருத்த படிவ பணிகளை எளிதாக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.