தெற்கு ரயில்வேயில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், முதல் முறையாக 12 பெட்டிகள் கொண்ட பிரத்யேக பார்சல் ரயில் சேவை வரும் டிசம்பர் 12 முதல் தொடங்கப்படவுள்ளது.
இந்த ரயில் மங்களூரு மற்றும் சென்னை ராயபுரம் இடையே இயக்கப்படவுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 23 டன் பார்சல்களை ஏற்றி செல்ல முடியும். இந்த ரயில், சேலம், கோவை உட்பட 12 முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பயணிகள் ரயில்களை போலவே, இந்த சரக்கு ரயிலுக்கும் புறப்படும் மற்றும் நின்று செல்லும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இயக்கத்தை கண்காணிக்க ராயபுரத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, இந்த சேவையைச் சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.