சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று மாலை 4 மணியளவில் பயணிகள் ரயில் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறம் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கெவ்ரா ரயில் நிலையத்தில் இருந்து பிலாஸ்பூர் நோக்கிச் சென்ற மெமு பயணிகள் ரயில், சரக்கு ரயிலுடன் மோதியதில், பயணிகள் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டதுடன், சில பெட்டிகள் சரக்கு ரயிலின் மீது சென்றன.
மீட்புப் படையினர் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000மும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.