அதிமுகவில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், ஈரோட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்துப் பேசியது அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த திருநாவுக்கரசரை செங்கோட்டையன் சந்தித்தது எதற்காக என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.
இந்தச் சந்திப்பின்போது தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைப்பது குறித்து செங்கோட்டையன், திருநாவுக்கரசரிடம் பேசியிருக்கலாம் என்றும், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்தும் இந்த முயற்சிக்கு திருநாவுக்கரசர் மூலம் காய் நகர்த்தப்பட்டதாகவும் ஊடகங்களில் யூகங்கள் வேகமாக பரவின. மேலும் திருநாவுக்கரசர், தவெகவில் இணைய செங்கோட்டையன் கோரிக்கை விடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எனினும், இந்த செய்திகளுக்குத் திருநாவுக்கரசர் மறுப்பு தெரிவித்தார். "நாங்கள் சந்தித்துப் பேசியது உண்மைதான். ஆனால், கூட்டணி அல்லது பெரிய அரசியல் விவகாரங்கள் குறித்து பேசவில்லை. நலம் விசாரித்துக் கொண்டோம். இதை தவிர வேறு எதுவும் இல்லை," என்று அவர் கூறியுள்ளார்.
ஆனாலும், இவ்வளவு பெரிய அரசியல் ஆளுமைகளின் சந்திப்பில் அரசியல் பேசப்படாமல் இருக்குமா என்ற விவாதம் தொடர்ந்து எழுந்து வருகிறது.