கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் வீடு மற்றும் பாலயம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் இன்று மிரட்டல் வந்தது.
முதலமைச்சரின் தனிச் செயலாளருக்கு இந்த அச்சுறுத்தும் மின்னஞ்சல் வந்ததை தொடர்ந்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழு மற்றும் மோப்ப நாய்ப் படையுடன் இரண்டு இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், இந்த மிரட்டல் வதந்தி என்று காவல்துறை உறுதிப்படுத்தியது.
இதேபோன்ற மிரட்டல்கள் இதற்கு முன்னரும் வந்துள்ளதாகவும், மிரட்டல் விடுத்தவர் பெரும்பாலும் தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்த குறிப்புகளை சேர்த்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மின்னஞ்சல்கள் டார்க் வெப் மூலம் அனுப்பப்பட்டதால், குற்றவாளியை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மிரட்டல் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மிரட்டல் விடுக்கப்பட்ட நேரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் வெளிநாட்டு பயணமாக துபாயில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது