அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை நோக்கி, "தொகுதி மக்களை கேட்டுவிட்டுத்தான் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தாரா?" என கேள்வி எழுப்பினார்.
ஈபிஎஸ்-ஸின் இந்த கேள்விக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில், செங்கோட்டையன் தொகுதி மக்களிடம் வாக்கு கேட்டு வந்து வெற்றி பெற்றவர் என்றும், ஆனால் தொகுதி மக்களைக் கேட்டு ராஜினாமா செய்தாரா என்றும் ஈபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து செய்தியாளர்கள் டிடிவி தினகரனிடம் கருத்து கேட்டபோது, எடப்பாடி பழனிசாமி 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும்போது அந்த 18 தொகுதி மக்களை கேட்டாரா? அதிமுகவின் விதிகளை மாற்றும்போது தொண்டர்களை கேட்டாரா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.
மேலும், அதிமுகவுக்குத் துரோகம் செய்தவர்களை ஆண்டவன் தண்டிப்பார் என ஈபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு, "துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், அதை எடப்பாடிக்குத்தான் கொடுக்க வேண்டும்" என்றும் அவர் பதிலளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.