பிரதமர் மோடி இம்மாத இறுதியில் தமிழகம் வர இருப்பதாகவும், அவர் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுவார் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27 மற்றும் 28 ஆகிய இரண்டு தேதிகளில் தமிழகம் வர இருப்பதாகவும், அவர் அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் சேர்ந்து பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் வருகையை ஒட்டி, பிரதமரின் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மூன்று மாவட்டங்களிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஜூலை 26 ஆம் தேதி கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்திற்கு வருகை தரும் பிரதமர், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்றும், அங்கிருந்து நேராக தமிழகம் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரதமரின் தமிழக வருகையின்போது அவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர்களை சந்தித்து, தேர்தலை எதிர்கொள்ளும் சில ஆலோசனைகளை கூறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.