இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு இந்தியாவின் முக்கிய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த நிலையில், போக்குவரத்து, வங்கிகள் உட்பட பல பணிகள் முடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை இந்த நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன என்றும், கடைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொது வேலைநிறுத்தம் நடந்தாலும், எந்தவித பாதிப்பும் இல்லாமல் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அனைத்து போக்குவரத்து மேலாண்மை இயக்குநர்களுக்கும் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி, தினசரி கால அட்டவணைப்படி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் இருக்கக் கூடாது என்றும், பேருந்துகளை பணிமனைக்கு உள்ளேதான் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகள் இயக்கப்படுவதை வேலைநிறுத்தம் நடத்துபவர்கள் தடுத்தால், உடனே காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், மேலும் பேருந்துகள் சரியாக இயங்கி வருவதை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தை பொருத்தவரை போக்குவரத்து இயல்பாக இருக்கும் என்றும், நாடு தழுவிய போராட்டத்தால் எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, காலை முதலே கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.