மத்தியில் வலுவான ஆட்சி இருக்கும் நிலையில், மாநிலத்திலும் தீய சக்தி அகற்றப்பட்டு வலுவான ஆட்சி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது பயணத்தை தொடங்கிய நிலையில், கோவையில் உள்ள மேட்டுப்பாளையத்தில் அவர் ஆவேசமாக பேசினார்.
"மத்தியில் வலுவான ஆட்சியை நாங்கள் கொண்டுள்ளோம். அதேபோல் தமிழ்நாட்டிலும் வரும் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டு வலுவான ஆட்சி அமைப்போம். தீய சக்தியான தி.மு.க. வரும் தேர்தலில் அகற்றப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.
"அஜித்குமார் என்ற இளைஞரைக் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்கள் என்றும், தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும், சட்டம் இல்லை என்றும் தெரிவித்தார்.
பெண்கள் வெளியில் நடமாடக்கூட முடியாத அளவுக்கு பாதுகாப்பு சூழல் உள்ளது என்று தெரிவித்த அவர், "கொள்ளை அடிப்பதே தி.மு.க.வின் நோக்கம் என்றும், தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இதுவரை நான்கு ஆண்டுகளில் 52% உயர்த்தப்பட்டுள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.
"அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இயல்பானது. தேர்தல் கூட்டணி என்பது எதிரிகளை வீழ்த்தவும், வாக்குகள் சிதறாமல் இருப்பதற்கும் இந்த கூட்டணி" என்று கூறிய அவர், "கடந்த 99 ஆம் ஆண்டு பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைக்கவில்லையா? என்றும் கேள்வி எழுப்பினார்.