பிரபல நடிகை ராதிகா சரத்குமார் அவர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'கிழக்கே போகும் ரயில்' என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான ராதிகா, 1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்படப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ராதிகா, தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று நடிகை ராதிகா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு பாதிப்பிற்கான சிகிச்சை மருத்துவர்களால் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த நான்கு நாட்களுக்கு ராதிகா மருத்துவர்கள் பார்வையில் இருப்பார் என்றும், அதன் பிறகு அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகை ராதிகா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.