ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு தற்போது நிரந்தரமாக அந்த தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏமனில் செவிலியராக பணிபுரிந்த நிமிஷா பிரியா, பின்னர் தனது சொந்த கிளினிக்கை தொடங்கினார். அப்போது, அந்நாட்டை சேர்ந்த மெஹ்தி என்பவரை பங்குதாரராக சேர்த்தார். ஆனால், மெஹ்தி நிமிஷாவின் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறித்துக்கொண்டு அவரை மிரட்ட தொடங்கினார். மெஹ்தியிடமிருந்து தப்பிக்க, நிமிஷா அவருக்கு மயக்க மருந்து கொடுத்ததாகக்கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இது மெஹ்தியின் மரணத்திற்குக் காரணமானது. இந்த வழக்கில் நிமிஷா கைது செய்யப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நிமிஷாவின் மரண தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. மேலும், ஏமன் நாட்டின் மதகுருவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக, அவரது மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த சூழலில்தான், நிமிஷா பிரியாவின் 13 வயது மகள், தனது தாயை விடுவிக்க கோரி ஏமன் நாட்டிற்கே சென்று உருக்கமான கோரிக்கை விடுத்தார். மகளின் இந்த கோரிக்கை, ஏமன் அரசு மற்றும் மதத் தலைவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, தற்போது நிமிஷா பிரியாவின் மரண தண்டனை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய கிராண்ட் முஃப்தி அபுபக்கர் அலுவலகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.