புனேவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 23 வயது இளைஞர், நேற்று காலை அலுவலக மீட்டிங் முடிந்த சில நிமிடங்களிலேயே ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பியூஷ் அசோக் கவாடே என்ற அந்த ஐடி பொறியாளர், புனேவின் ஹிஞ்சவாடி ஐடி பூங்காவில் உள்ள அட்லஸ் காப்கோ நிறுவனத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக அந்த நிறுவனத்தில் பியூஷ் பணிபுரிந்து வந்துள்ளார்.
காவல்துறையின் விசாரணையில் பியூஷ் அலுவலக மீட்டிங்கில் கலந்துகொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறிவிட்டு வெளியேறினார். சில நிமிடங்களுக்கு பிறகு, அவர் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து ஒரு தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், "நான் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தோல்வியடைந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்," என்று பியூஷ் எழுதியுள்ளார். மேலும், தனது தந்தைக்கு எழுதிய ஒரு செய்தியில், தான் அவரது மகனாக இருக்கத் தகுதியற்றவன் என்றும், தனது செயலுக்கு மன்னிப்பு கோரியும் குறிப்பிட்டுள்ளார்.
பியூஷ் தற்கொலைக்கான காரணங்களை கண்டுபிடிக்க மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.