மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் உணவு கடைகளில் தரம் குறைவான உணவு அதிக விலைக்கு விற்கப்படுவதால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு இன்று மதுரை அருகே பாரபத்தியில் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை மாநாட்டு பந்தலில் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்களுக்கு வழங்குவதற்காக இனிப்பு பையும் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு முதலே முன்னதாக சென்று இடம்பிடிக்க ஏராளமான தவெக தொண்டர்கள் பாரபத்தி நோக்கி படையெடுத்துள்ளனர். முன்னதாக விக்கிரவாண்டியில் மாநாடு நடந்தபோது தொண்டர்கள் உணவகங்கள் அருகே இல்லாததால் வேர்க்கடலைகளை சாப்பிட்டு பசியாறியது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாநாடு நடக்கும் பகுதியில் உணவகங்கள் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறாக அப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் உணவகங்களில் உணவு தரமாக இல்லை என்றும், அதிக விலை இருப்பதாகவும் தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வெறும் குஸ்காவை மூன்று கரண்டி வைத்துவிட்டு ரூ.70 ரூபாய் கேட்பதாகவும், தண்ணீர் போல இருக்கும் கூழ் விலை ரூ.40 சொல்வதாகவும் ஆதங்கப்பட்டுள்ளனர், மேலும் வெஜிடபிள் பிரியாணி என்று விற்கிறார்கள், அதில் பேருக்குக் கூட காய்கறிகள் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
Edit by Prasanth.K