Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்! - 30,000 பேர் பங்கேற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு!

Advertiesment
Sadhguru

Prasanth K

, திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (14:29 IST)

‘தமிழ் மொழியின் பெருமை நம் நெஞ்சில் இருந்தால், தமிழ் கலாச்சாரத்தில் ஆன்மீகத் தொண்டாற்றிய சித்தர்கள், யோகிகள் மற்றும் நாயன்மார்களின் பெயர்களை, நம் குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்’ என்று ஈஷாவில் நேற்று (03/08/2025) நடைபெற்ற ‘குருவின் மடியில்’ ஒரு நாள் தியான நிகழ்ச்சியில் சத்குரு பேசினார். 

 

கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் மக்களுக்கென்று பிரத்யேகமாக சத்குரு வழிநடத்திய குருவின் மடியில் எனும் தியான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட 112 இடங்களிலும், கேரளாவிலும், கர்நாடகாவில் 5 இடங்களிலும், சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் என மொத்தம் 128 இடங்களில் நேரலை நிகழ்ச்சியாக நடைபெற்றது. இதில் நேரடியாகவும், நேரலை செய்யப்பட்ட இடங்களிலும் சேர்த்து மொத்தமாக 30,000-க்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.

 

ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசையுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், சத்குரு வழிநடத்திய சக்திமிக்க தியான அமர்வுகள், அருளுரை ஆகியன இடம்பெற்றன. இறுதியில் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார். 

 

இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசுகையில், “ஒரு மொழி நீண்ட காலத்திற்கு இருக்க வேண்டும் என்றால் அதனை சுற்றியுள்ள கலாச்சார அம்சங்கள் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். தமிழ் மொழியின் பெருமை நம் நெஞ்சில் இருந்தால், தமிழ் கலாச்சாரத்தில் ஆன்மீகத் தொண்டாற்றிய சித்தர்கள், யோகிகள் மற்றும் நாயன்மார்களின் பெயர்களை தமிழ் மக்கள் தங்களின் குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும். அதே போன்று தமிழ் மொழி எங்கள் உயிர், மூச்சு என்று சொல்வதோடு நிற்காமல் சிலம்பம் போன்ற கலைகளை தமிழ் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இது சண்டை செய்வதற்காக இல்லை, ஏதோ ஒரு அபாயம் வந்தால் அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள இது உதவும். முக்கியமாக நம் பண்பாட்டில் இருக்கும் திறமைகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். 

 

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களும், அவர்களுக்குள் உருவாகும் கோபம், வெறுப்பு, பொறாமை, பயம், அன்பு, ஆனந்தம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் அவர்களே பொறுப்பு என்பதை உணர வேண்டும். ‘ஈஷா யோகா’ என்ற இந்த இயக்கம் மனிதர்களை பொறுப்புணர்வு உள்ளவர்களாக உருவாக்கும் நோக்கத்திலேயே நடைபெற்று வருகிறது. அதேபோன்று வெளியில் இருக்கும் சூழல்களை சமாளிக்க முயற்சிக்கும் முன்பு ஒவ்வொரு தனி மனிதர்களும் தங்களின் உள் சூழ்நிலையை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 

யோகா, தியானம் செய்வதற்கு எல்லாம் நேரமில்லை என்று மக்கள் தற்போது கூறுகிறார்கள். ஆனால் நம் நாட்டின் பிரதமரே தினமும் யோகப் பயிற்சிகளை செய்கிறார். நாம் வெறும் 7 நிமிடங்களில் செய்யக் கூடிய ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ எனும் இலவச தியான செயலியை அறிமுகப்படுத்தி உள்ளோம். தமிழ் மக்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு நாளில் 7 நிமிடங்களாவது அவர்களின் மன நலத்திற்காக செலவிட்டு இந்த தியானத்தை செய்ய வேண்டும்.” எனக் கூறினார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு விளம்பரங்களில் முதல்வர் பெயர்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!