கோவையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராக 54 வயது இந்திரா என்பவர் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அவரிடம், சூலூர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கோவிலில் அதிக வருவாய் வருவதாகவும், ஆனால் அந்தக் கோவிலில் முறையான நிர்வாகம் இல்லை என்றும் சுரேஷ்குமார் என்பவர் மனு அளித்தார். இதனை அடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அந்தக் கோவிலை கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால், பரிந்துரை செய்வதற்கு தனக்கு மூன்று லட்சம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று இந்திரா கேட்ட நிலையில், அவ்வளவு பணம் தன்னால் தர முடியாது, ஒன்றரை லட்ச ரூபாய் தருவதாக சுரேஷ்குமார் ஒப்புக்கொண்டார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.
போலீசாரின் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய பணத்தை இந்திராவிடம் சுரேஷ் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், லஞ்சம் வாங்கிய இந்திராவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.